Sri Lanka News

கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் முயற்சி; திருகோணமலையில் அஷ்ரப் தாஹிர் எம்பி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக, கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் அவர்கள் மாவட்ட ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.

அதன் அடிப்படையில் இன்று (March 11) திருகோணமலை மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு, அங்குள்ள கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர்கள், பிரதேச அமைப்பாளர்கள் உள்ளிட்ட கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் ஆகிய பலருடனும் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார்.

இதன் போது கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தி, கட்சி சார்ந்த செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட ரீதியான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கான செயலமர்வுகளை நடத்துவது தொடர்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெளிவுபடுத்தினார்.

இந்த செயலமர்வு அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கு தனியாகவும், வட மாகாணத்திற்கு தனியாகவும், மத்திய மாகாணம் மற்றும் மேல் மாகாணம் போன்ற பகுதிகளுக்குத் தனியாகவும் நடைபெறவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது கின்னியா நகர சபை மற்றும் கின்னியா பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்களுடன் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் நிதி வளங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் வைத்தியர் ஹில்மி முகைதீன், மாவட்ட செயலாளர் அனீஸ், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா உள்ளிட்ட கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

-ஊடகப் பிரிவு-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button