நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கோலாகலமாக நிறைவு

நிந்தவூர் கமு/கமு/அல்-மதீனா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள், பாடசாலை மைதானத்தில் நேற்று சனிக்கிழமை மிகவும் விமர்சையாக நடைபெற்றன. பாடசாலையின் அதிபர் எம்.ஹெச். அப்துல் றாபிஊ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாணவர்களின் பல்வேறு விளையாட்டுத் திறமைகளும் அணிவகுப்பு மரியாதைகளும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த போட்டித் தொடரின் இறுதி நிகழ்வாக இது அமைந்திருந்தது.
இந்த விழாவில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், கௌரவ அதிதியாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் அவர்கள் கலந்துகொண்டார். மேலும், கல்முனை வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம். ஜாபிர், எச். அம்ஜத் அலி, எம்.ஜே. ஜுசைல், கே.எம். ஜலீல் மற்றும் ஜே. ஜுவைரியா ஆகியோர் விசேட அதிதிகளாகப் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசில்களை வழங்கி வைத்தனர்.
பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில், ஏராளமான பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர். நிந்தவூர் மண்ணின் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்த நிகழ்வு, வெற்றியீட்டிய இல்லங்களுக்கான வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டு இனிதே நிறைவு பெற்றது.










