News

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மின் கட்டணத்தில் மாற்றம்? இலங்கையில் புதிய திட்டம்

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மின் கட்டணத்தில் மாற்றம்? இலங்கையில் புதிய திட்டம்

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கும் முறைக்குப் பதிலாக, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கட்டணத்தைத் திருத்தும் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்த எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரியவருகின்றது.

இந்தப் புதிய கட்டணச் சூத்திரத்தை இறுதி செய்வது தொடர்பாக எரிசக்தி அமைச்சும் நிதி அமைச்சும் தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

ஆண்டின் முதல் சில மாதங்கள் வறட்சியாகவும், ஆண்டின் இறுதியில் அதிக மழையும் கிடைப்பதை இந்தப் புதிய முறை கணக்கில் கொள்ளும்.

தற்போதைய முறையில் வறட்சி காலத்தில் கட்டணம் அதிகரிப்பதையும், மழைக்காலத்தில் குறைவதையும் நுகர்வோர் எதிர்கொள்கின்றனர்.

இந்தநிலையில், புதிய முறையின்படி ஆண்டின் தொடக்கத்தில் ஒருமுறை மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

இதனால் முதல் ஆறு மாதங்களில் மின்சார சபை நட்டத்தைச் சந்தித்தாலும், ஆண்டின் இரண்டாம் பாதியில் கிடைக்கும் வருவாய் மூலம் அந்த நட்டத்தை ஈடுகட்ட முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், ஒரே மாதிரியான மின்சாரக் கட்டணம் அமுலில் இருப்பதால், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களது செலவுகளை முன்கூட்டியே திட்டமிட முடியும்.

மின்சாரக் கட்டணம் அடிக்கடி மாறுவதால் பொருட்களின் விலைகளும் அடிக்கடி உயர்கின்றன. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே கட்டண மாற்றம் செய்யப்படுவதால், சந்தையில் பொருட்களின் விலைகள் குறுகிய காலத்தில் பாரிய அளவில் தளம்பலாவது தவிர்க்கப்படும்.

இந்த நிலையில், குறித்த சூத்திரம் இறுதி செய்யப்பட்ட பின்னர், மின்சாரத் துறை ஒழுங்குமுறை அமைப்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button