கத்தார் ஏர்வேஸ் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ஜூன் 15 வரை நேரம் திருத்தப்பட்ட விமான கால அட்டவணை:

சர்வதேச ரீதியாக விமான சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், ஜூன் 15 ஆம் திகதி வரையிலான திருத்தப்பட்ட புதிய பயண அட்டவணையை கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) வெளியிட்டுள்ளது. இதன்படி, மே மாத நடுப்பகுதியளவில் உலகின் 120-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு தனது சேவைகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கத்தார் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையுடன் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக வான்வழிகள் ஊடாக இந்த விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இருப்பினும், பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை காரணிகளால் இந்த அட்டவணையில் மாற்றங்கள் அல்லது ரத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய இடங்கள் மற்றும் ஆரம்பத் திகதிகள்:
புதிய அட்டவணையின்படி ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சேவைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக:
ஆசியா: கொழும்பு, சென்னை, கொச்சி, மும்பை, டெல்லி, டாக்கா, காத்மாண்டு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான சேவைகள் தொடர்கின்றன. அத்துடன் மே 16 முதல் செங்டு, சோங்கிங், கோவா போன்ற இடங்களுக்கான சேவைகள் ஆரம்பமாகவுள்ளன.
ஐரோப்பா: லண்டன் ஹீத்ரோ, பாரிஸ், ரோம் போன்ற நகரங்களுடன் மே மாதம் முதல் மலகா, மைக்கோனோஸ் மற்றும் அந்தால்யா போன்ற சுற்றுலாத் தலங்களுக்கான சேவைகளும் இணைகின்றன.
அமெரிக்கா: நியூயார்க், சிகாகோ, டொராண்டோ உள்ளிட்ட நகரங்களுடன் ஏப்ரல் 16 முதல் சீட்டில் (Seattle) மற்றும் ஜூன் 11 முதல் சான் பிரான்சிஸ்கோவிற்கான சேவைகள் ஆரம்பமாகும்.
பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்:
ஜூன் 15 வரை உறுதிப்படுத்தப்பட்ட பயணச் சீட்டுகளைக் கொண்ட பயணிகள், விமான நிறுவனத்தின் இணையதளம் அல்லது செயலி மூலம் தமது விபரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். செல்லுபடியாகும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் இன்றி விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சலுகைகள் மற்றும் மாற்றங்கள்:
2026 பிப்ரவரி 28 முதல் ஜூன் 15 வரை பயணிக்கத் திட்டமிட்டிருந்த பயணிகளுக்குப் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன:
தேதி மாற்றம்: அக்டோபர் 31, 2026 வரை எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி பயணத் தேதியை மாற்றிக்கொள்ளலாம்.
பணம் திரும்பப் பெறுதல்: பயன்படுத்தப்படாத டிக்கெட்டுகளுக்கான முழுப் பணத்தையும் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் (இதற்கு அதிகபட்சம் 28 நாட்கள் வரை எடுக்கலாம்).




