நமது மத மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பல தலைமுறைகளாகப் பாதுகாப்பதற்கும், எதிர்கால சந்ததியினரிடம் அதனை உயிரோட்டத்துடன் கொண்டு சேர்ப்பதற்கும் பெல்லன்வில எசல பெரஹராவைப் போன்ற மத மற்றும் கலாசார உற்சவங்கள் விசேட பங்களிப்பைச் செய்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பெல்லன்வில ராஜமகா விகாரையில் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற 76ஆவது வருடாந்த பெல்லன்வில எசல பெரஹரா விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பெல்லன்வில ராஜமகா விகாரையானது இலங்கையின் பௌத்த பாரம்பரியத்திலும், அதேபோன்று நாட்டின் கலாசார மற்றும் கலைப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் விசேட இடத்தைப் பெற்றுள்ளதாகக் கூறிய பிரதமர், எசல பெரஹரா என்பது வெறுமனே ஓர் அழகிய கலாசார ஊர்வலம் மட்டுமல்ல, மத நம்பிக்கைகள், பாரம்பரிய நடனங்கள், இசை கலைஞர்களின் திறமைகளுடன் கூட்டுறவையும் ஒன்றிணைக்கும் உயிரோட்டமிக்கதொரு பாரம்பரியமாகும் எனத் தெரிவித்தார்.
ஆகையினால், இத்தகைய பாரம்பரியங்களைப் பாதுகாப்பது என்பது கடந்த காலத்தை மட்டும் பாதுகாப்பதாக அமையாது என்றும், எதிர்கால சந்ததியினர் தமது கலாசார அடையாளத்தைக் கண்டறிவதற்கும், அதனை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கும் தேவையான வழியமைத்துக் கொடுப்பதாகும் என்பதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாகப் பிள்ளைகள் மற்றும் இளைஞர் சமுதாயத்தின் மத்தியில் பாரம்பரியங்கள் மற்றும் கலாசார மரபுகள் மீதான கௌரவத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், பௌத்த தர்மத்தில் போதிக்கப்படும் கருணை, அன்பு, அகிம்சை மற்றும் சகவாழ்வு போன்ற குணாம்சங்களை அன்றாட வாழ்க்கையில் இணைத்துக்கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அத்தோடு, பாரம்பரியக் கலைஞர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் பாரம்பரியங்களை எதிர்கால சந்ததியினருக்குக் கையளிப்பதற்காகத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
பெல்லன்வில எசல பெரஹராவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் விகாராதிபதி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினருக்கும், விகாரையின் அங்கத்தவர் சபையினருக்கும், ஏற்பாட்டுக் குழுவினருக்கும், பாரம்பரிய நடனக் கலைஞர்கள், மேள வாத்தியக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களுக்கும் பிரதமர் தனது கௌரவபூர்வமான நன்றியைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில்,
“பெரஹரா மகோற்சவத்தை மென்மேலும் உறுதியாக முன்னெடுத்துச் சென்று, நமது பௌத்த தத்துவத்தையும் கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டியது நம் அனைவருக்கும் இருக்கின்ற பொறுப்பாகும். அரசாங்கம் என்ற ரீதியில் அதற்காக இயன்றவரை அதிகபட்ச பங்களிப்பை வழங்கத் தயாராக இருக்கின்றோம். மத மற்றும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அனைவருடனும் முன்னோக்கிச் செல்ல இம்மகோற்சவம் பெருந்துணையாக அமைகின்றது,” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பெல்லன்வில ராஜமகா விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரும், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும், பக்தர்களும் கலந்துகொண்டனர்.

