Home இலங்கைச் செய்திகள்வைத்தியசாலை ஊழியர்களின் சீருடை பிரச்சினைக்கு தீர்வு கோரி அஷ்ரப் தாஹிர் வலியுறுத்தல்…!

வைத்தியசாலை ஊழியர்களின் சீருடை பிரச்சினைக்கு தீர்வு கோரி அஷ்ரப் தாஹிர் வலியுறுத்தல்…!

by Nabishad
0 comments

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஊழியர்களின் சீருடை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கோரி பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வலியுறுத்தல்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சுகாதார ஊழியர்களின் சீருடை தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இன்று (18) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் முஸ்லிம் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், சம்பந்தப்பட்ட சுகாதார ஊழியர்கள் ஒன்பது பேர் வேறு வைத்தியசாலைகளுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்முனை பிரதேசத்தைப் பொறுத்தவரையில், ‘தற்காலிகம்’ என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும், கடந்த காலங்களில் தற்காலிக ஏற்பாடாக வழங்கப்பட்ட பிரதேச செயலகம் தொடர்பான விடயங்கள் கூட இன்று அப்பிரதேச மக்களின் சகவாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.

banner

“22 மில்லியன் மக்கள் வாழும் இந்த நாட்டில் முஸ்லிம்கள் வாழ்கிறார்களா? இல்லையா?” என்ற கேள்வியை முன்வைத்த அவர், அரசாங்கத்தின் கையறு நிலையாகவே குறித்த தற்காலிக இடமாற்ற நடவடிக்கையை தாம் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசாங்கம், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளில் ஏன் திடகாத்திரமான நிரந்தரத் தீர்வுகளை வழங்குவதற்கு தயங்குகின்றது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

இது ஒரு வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள தனிப்பட்ட பிரச்சினையாக மாத்திரம் பார்க்கப்பட முடியாது எனத் தெரிவித்த அஷ்ரப் தாஹிர், அரச நிறுவனங்களின் விதிமுறைகள், சுற்றுநிருபங்கள் மற்றும் அரசியலமைப்பு உள்ளிட்ட சட்டரீதியான ஏற்பாடுகளை மீறி ஒரு வைத்திய அதிகாரி எடுக்கும் தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளமை கவலைக்குரியது என்றும் தெரிவித்தார்.

எனவே, குறித்த சுகாதார ஊழியர்களை தற்காலிகமாக வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் செய்துள்ள தீர்மானத்தில் தாம் திருப்தியடையவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த ஒன்பது ஊழியர்களும் அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட அதே கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையிலேயே, அவர்களுக்குரிய சீருடையை அணிந்து கொண்டு வழமையான முறையில் கடமையாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்திற்கு தற்காலிக ஏற்பாடுகளுக்குப் பதிலாக, அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

-ஊடகப் பிரிவு-

You may also like

Leave a Comment