ராஜஸ்தான் ரோயல்ஸ் அபார வெற்றி – சென்னைக்கு முதல் சறுக்கல்!

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 3வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குவாஹாட்டியில் நடைபெற்ற குறித்த போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
அதிரடி வீரர் சஞ்சு சம்சன் 6 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் 6 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
ஜேமி ஓவர்டன் 43 ஓட்டங்களை குவித்த போதிலும், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.
இதனால் 19.4 ஓவர்கள் நிறைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், ரவீந்திர ஜடேஜா மற்றும் நன்றே பர்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தநிலையில் 128 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 12.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளை எதிர்கொண்டு அதிகபட்சமாக 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் சென்னை அணியின் சார்பில் அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.




