Sri Lanka News

பேக்கரி உற்பத்திகளின் விலையும் அதிகரிக்குமா? – ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி

எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய எரிசக்தி மூலங்களைப் பெறுவதில் நாடு முழுவதும் உள்ள பேக்கரிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், தற்போது பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.ரத்தொலுஹமவிலுள்ள சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள பேக்கரிகளில் சுமார் 25 வீதமானவை எரிவாயுவையும் 25 வீதம் முதல் 30 வீதமானவை டீசல் மற்றும் மண்ணெண்ணெயையும் எஞ்சியவை விறகு மற்றும் ஏனைய மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.பல பேக்கரிகள் வழமையாக டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய்யைக் கொள்கலன்களில் கொண்டு செல்வது வழக்கம்.

எனினும், கொள்கலன்களில் எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்கம் விதித்துள்ள தடை காரணமாக பேக்கரி உரிமையாளர்கள் தமது அன்றாட பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

நாடு முழுவதும் நிலவும் மின்சாரத் தடைகளும் பேக்கரி உற்பத்திகளைப் பெரிதும் பாதித்துள்ளன.

தங்கள் தொழிற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல, பேக்கரி உரிமையாளர்களுக்கு விசேட அனுமதி முறையின் கீழ் கொள்கலன்களில் எரிபொருளைப் பெற்றுக் கொள்ளத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு ஜயவர்தன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button