ஊடகவியலாளர்கள் மீதான கொடூரங்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு! – ஹக்கீம் எம்.பி. கோரிக்கை

யுத்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆனைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வும், “பாரதி ஒரு மனிதாபிமான ஊடகன்” எனும் நூல் வெளியீட்டு விழாவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தில் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரவூப் ஹக்கீம் எம்.பி. இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
“யுத்த காலத்திலும் பின்னரும் ஊடகவியலாளர்கள் – குறிப்பாகத் தமிழ் ஊடகவியலாளர்கள் – சொல்லொணாக் கொடூரங்களையும், துன்ப துயரங்களையும், அடாவடித்தனங்களையும் எதிர்கொண்டனர். பலர் கொல்லப்பட்டனர். பலர் காணாமலாக்கப்பட்டனர். அவர்கள் எவருக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.
தமிழ் ஊடகவியலாளர்கள் என்று இல்லை, சிங்கள ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் கூட கொடூரங்கள் இழைக்கப்பட்டன. படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை தொடர்பில் நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. நீதி, நேர்மையான புலனாய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை. குற்றம் இழைத்தோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
ஆகவே இவை பற்றி எல்லாம் விசாரிப்பதற்குத் தனியான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்க வேண்டும். அப்படி நியமித்தால் பல உண்மைகளை வெளிக்கொணர வாய்ப்புக் கிட்டும்.
படைத் தரப்பில், புலனாய்வுப் பிரிவில் இருந்தவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய விடயங்கள் இப்போது மெல்ல மெல்ல வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன.
ஆகவே சிறுபான்மையினரின் கட்சிகள் ஒன்றிணைந்து இத்தகைய விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படுவதற்கு வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.




