Sri Lanka News
555 சுற்றுலாப் பயணிகளுடன் திருகோணமலை வந்த சொகுசு கப்பல்

பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் 555 சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த “எம்.வி. கிரிஸ்டல் சிம்பரி” என்ற ஆடம்பர சுற்றுலா சொகுசு பயணிகள் கப்பல் இன்று திங்கட்கிழமை (23) இலங்கை துறைமுக அதிகாரசபையின் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பலில் அவுஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்ளனர்.
திருகோணமலைக்கு வருகை தந்துள்ள இவர்கள் திருகோணமலை, சிகிரியா, ஹபரணை ஆகிய பிரதேசங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களைப் பார்வையிடத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பஹாமாஸில் பதிவுசெய்யப்பட்ட இந்தக் கப்பலில் 497 பேர் கொண்ட பணியாளர் குழுவினர் உள்ளனர்.
இக்கப்பல் ஒரு நாள் திருகோணமலையில் தரித்து நிற்க உள்ளது.




