Sri Lanka News

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: ஜனாதிபதிக்கு ஜி.எல். பீரிஸ் அவசர கடிதம்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் மூலம் சில முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ள ஜி.எல். பீரிஸ், இது தொடர்பில் ஜனாதிபதி உடனடியாக அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகச் சந்தையில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை எதிர்காலத்தில் உள்நாட்டுச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதன் ஊடாக நாட்டின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் என்றும், ஏற்கனவே பொருளாதாரக் கஷ்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுமை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, குறிப்பாக நாட்டின் தேயிலை போன்ற ஏற்றுமதிப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள் இழக்கப்படலாம் என்றும், அதன் மூலம் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நிலவும் விமானப் போக்குவரத்துத் தடைகள் காரணமாக ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் வளைகுடா பிராந்தியங்களில் இருந்து வரவிருந்த சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் தமது முன்பதிவுகளை இரத்துச் செய்து வருவதால், சுற்றுலா ஹோட்டல் துறைக்கு ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியம் முழுவதும் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் வெளிநாட்டுச் செலாவணியைத் தொடர்ச்சியாகப் பேணுவது இந்த நிலைமையின் கீழ் பெரும் அவதானத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button