Sri Lanka News

கடும் குளிரில் உறையப்போகும் வடக்கு, கிழக்கு: பேராசிரியர் பிரதீபராஜாவின் எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மாலை 6.00 முதல் காலை 6.00 மணி வரை கடுமையான குளிரான வானிலை நிலவும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில்

இக்காலப்பகுதியில் உணரக்கூடிய வெப்பநிலையின் அளவு 16 பாகை செல்சியஸ் வரை நிலவுவதற்கு சாத்தியமுள்ளது.

இது முதியோர், குழந்தைகள், நோயாளர்கள் மற்றும் குளிர் உணர்திறன் உள்ளவர்களுக்கு அசௌகரியத்தையும் சிலருக்கு பாதிப்புக்களையும் ஏற்படுத்தக்கூடும்.

இதற்கான காரணம் பகலில், தரை மேற்பரப்புகள் சூரிய ஒளியை உறிஞ்சி சூரியன் மறைந்த பின்னர் வளிமண்டலத்திற்கு நெட்டலைக்கதிர்வீச்சு வடிவில் மீண்டும் வெளியிடப்படுகிறது. இந்த நெட்டலைக்கதிர்வீச்சின் அளவே இரவு எவ்வளவு வெப்பநிலை நிலவும் என்பதை தீர்மானிக்கிறது.

இந்த குளிர் நிலைமை, முகில்களற்ற வானம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகளில் நிலவும் குளிரான நிலைமை, உயர் அழுத்தம், பலவீனமான காற்று, சாரீரப்பதன் அளவு போன்ற காரணங்களால் தீர்மானிக்கப்படுகின்றது.

ஆகவே அடுத்த சில நாட்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் இந்த குளிர் நிலைமை தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

குறிப்பாக, மாலை அல்லது இரவு வேளைகளில் திறந்த வாகனங்களில் பயணம் செய்வோர், இரவு வேளையில் நெல் வயல் காவலுக்காக பரந்த வெளிகளில் இருப்போர், காட்டுப் பகுதிகளில் அல்லது அதற்கு அண்மித்த பகுதிகளில் இரவுகளில் பட்டி மாடுகளை வைத்திருப்போர்,

குளங்கள், ஆறுகள், நீரேரிகளுக்கு அண்மித்து வாழ்பவர்கள், குளிருக்கான அதிஉணர்திறன் மிக்கவர்கள், குளிரான வானிலையினால் சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடியவர்கள், அடுத்த சில நாட்களுக்கு குளிர் நிலைமை தொடர்பில் மிக அவதானமாக இருப்பது சிறந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அவ்வப்போது மிதமான மழை கிடைக்கும் எனவும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் சற்று கனமான மழை கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button