குவைத்தில் இன்று இரண்டு இந்தியர்களுக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது:

குவைத்தில் போதைப்பொருள் மற்றும் மனோவியல் சார்ந்த போதை தரக்கூடிய மருந்து பொருட்களை நாட்டிற்குள் கடத்தியதற்காக இரண்டு இந்தியர்களுக்கு இன்று(06/01/26) செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காலித் அல்-தஹூஸ் தலைமையிலான அமர்வு குற்றவாளிகளுக்கு இந்த தண்டனை விதித்துள்ளது.
இவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட வழக்கு தொடர்பான சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. ஷுவைக் குடியிருப்பு பகுதி மற்றும் கைஃபான் ஆகிய இடங்களிலிருந்து 14 கிலோகிராம் தூய்மையான முதல்ரக ஹெராயின், 8 கிலோகிராம் மெத்தப்பேட்டமைன் மற்றும் 2 மின்னணு அளவீட்டு சாதனங்களும் குற்றம் சாட்டப்பட்ட இவர்களை கைது செய்யும் போது அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குவைத்திற்குள் அவற்றை விற்பனை செய்யும் நோக்கத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடத்தி வந்து வைத்ததாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் நாட்டிற்கு வெளியே உள்ள ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் அங்கத்தினராக வேலை செய்து வந்தனர். தண்டனை விதிக்கப்பட்ட இருவருடைய பெயர் விபரங்கள் மற்றும் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உள்ளிட்ட கூடுதல் விபரங்களை குவைத் பத்திரிகைகள் வெளியிடவில்லை.
நாட்டில் போதைப்பொருள் வியாபாரிகள், விநியோகஸ்தர்கள், இடைத்தரகர்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பவர்களுக்கு மரண தண்டனை மற்றும் பெரும் தொகையினை அபராதமும் விதிக்கும் புதிய சட்டம் கடந்த டிசம்பர்(2025) முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில, இன்று இந்தியர்கள் இருவருடைய மரணதண்டனை தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.




