துருக்கியில் விமான விபத்து: லிபிய இராணுவ பிரதானி 8 பேர் பலி

துருக்கி தலைநகர் அங்காரா அருகே நிகழ்ந்த கோர விமான விபத்தில், லிபிய இராணுவ பணிக்குழாம் பிரதானி ஜெனரல் மொஹமட் அலி அஹமட் அல்-ஹத்தாத் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
நேற்றிரவு அங்காராவின் எசன்போகா விமான நிலையத்திலிருந்து லிபிய தலைநகர் திரிப்போலி நோக்கிப் புறப்பட்ட ‘தஸால்ட் போல்கன் 50’ ரக தனியார் ஜெட் விமானம், புறப்பட்ட 40 நிமிடங்களில் ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.
இந்த விபத்தில் அல்-ஹத்தாத் உடன் பயணம் செய்த நான்கு உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் மூன்று விமானக் குழுவினரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
துருக்கிய அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையின்படி, இந்த விபத்தில் எவ்வித சதிவேலைகளும் இடம்பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, குறிப்பாக மின் கசிவு காரணமாக அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது ஹய்மானா மாவட்டத்தின் கெசிக்காவக் கிராமத்திற்கு அருகில் விமானம் வெடித்துச் சிதறியதாகத் தெரியவந்துள்ளது.
துருக்கி மற்றும் லிபியா இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பின்னர் அவர்கள் நாடு திரும்பியபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
லிபிய இராணுவத்தை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றிய அல்-ஹத்தாத்தின் மறைவு நாட்டிற்குப் பேரிழப்பு என அந்த நாட்டு பிரதமர் அப்துல் ஹமீத் தபீபா தெரிவித்துள்ளார்.
மேற்கு லிபியாவில் செல்வாக்கு மிக்க அதிகாரியாகத் திகழ்ந்த அவர், பிளவுபட்டுக் கிடக்கும் நாட்டை ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்துடன் ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இவரின் மறைவையொட்டி லிபியாவில் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டு, அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
துருக்கி அரசு இது குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், லிபியாவிலிருந்து ஒரு விசேட குழுவும் அங்கு விரைந்துள்ளது.




