பூண்டுலோயாவில் பறிமுதல் செய்யப்பட்ட 10 முச்சக்கரவண்டிகள் – சாரதிகளும் கைது

சட்டவிரோத நவீன வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டு விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை பெருத்திக்கொண்டு சுற்றுலாவிற்கு வந்த 10 முச்சக்கர வண்டிகளை பறிமுதல் செய்து அதன் சாரதிகளை கைது செய்து, பின்னர் பிணை வழங்கப்பட்டது என பூண்டுலோயா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சுகத் விஜேசுந்தர தெரிவித்தார்.
நேற்று (08)கம்பளை – பூண்டுலோயா பிரதான வீதியில் சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டிகளில் கம்பளையைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று சுற்றுலாவிற்கு வருவதாக கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டிகளை சோதனை செய்து அதன் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .
எனினும் தற்போது பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட 10 முச்சக்கர வண்டிகளும் நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் ஜனக பண்டாரவிடம் பரிசோதனைக்காக காண்பிக்க பட்டதாகவும் இதன் படி மோட்டார் வாகன ஆய்வாளரின் முடிவின்படி நவீன வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டு விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களைக் கொண்டுள்ளதுள்ளதோடு,
கூடுதலான மின் விளக்குகளை பொருத்துதல் மற்றும் வீதிக்கு தகுதியற்ற நிலையில் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் மீது நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமைப் பரிசோதகர் சுகத் விஜேசுந்தர தெரிவித்தார்.
- செ.திவாகரன்
