100 இற்கும் மேற்பட்ட பெண்கள் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்!

கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்பட்டுத்தப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசேட விசாரணையை மாநில அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
கர்நாடக கடலோர மாவட்டத்தின் தர்மஸ்தலாவில், பிரசித்தி பெற்ற மஞ்சுநாதா கோயிலில் 21 ஆண்டுகளுக்கு முன்னர் ஊழியராக பணிபுரிந்த பீமா என்பவர், கடந்த 4ஆம் திகதி காவல்துறையில் முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தார்.
அதில், தாம் 100இற்கும் மேற்பட்ட பெண்களின் உடலங்களை, தமது மேற்பார்வையாளர் உத்தரவின்படி புதைத்ததாக அவர் கூறியிருந்தார்.
இந்தநிலையில், 2003 ஆம் ஆண்டு தமது மகள் காணாமல் போனதாகத் தாய் ஒருவர் வழங்கிய முறைப்பாடும் குறித்த காவல்துறைக்குக் கிடைத்துள்ளதை அடுத்து தற்போது இந்தப் பிரச்சினை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.