World News

ஈரானுக்கு ஆதரவாக போரில் குதித்த ஏமன்

இஸ்ரேல் ஈரான் இடையே நிலவி வந்த மோதலில் அமெரிக்கா தலையிட்ட பிறகு அங்கு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. ஒரு பக்கம் இஸ்ரேலுக்குப் பதிலடி கொடுக்கிறோம் என ஈரான் சரமாரியாகத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில் போரில் தாங்களும் நுழைந்துவிட்டதாக ஏமனைப் பெரும்பகுதி கட்டுப்படுத்தும் ஹவுதி படை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே மோதல் தொடர்ந்து வந்தது. ஒரு பக்கம் ஈரானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதலை நடத்தியது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வந்தது. இரு நாடுகளும் இதுபோல மாறி மாறியே தாக்குதல் நடத்தி வந்தன.

இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென இந்த மோதலில் அமெரிக்கா வந்தது. ஈரானின் முக்கியமான அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து இன்று அதிகாலை அமெரிக்கா திடீரென தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானுக்குச் சேதம் சற்று அதிகமாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், அமெரிக்கா இப்போது இந்த மோதலில் உள்ளே வந்துள்ளது நிலைமை மொத்தமாக மாற்றுவதாக இருக்கிறது. அமெரிக்காவின் தலையீட்டால் இது பிராந்திய போராக வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இங்கு மற்ற நாடுகளும் தீவிரவாத குழுக்களும் கூட மோதலில் வர வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதற்கிடையே இந்த போரில் நுழைவதாக இப்போது ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி படை அறிவித்துள்ளது. ஏமன் நாட்டை பொறுத்தவரை அங்குப் பல காலமாகவே உள்நாட்டுக் குழப்பம் நிலவி வந்தது. இப்போது ஏமன் நாட்டில் தலைநகர் சனா உட்பட வடக்கின் பெரும்பகுதியை ஹவுதி படையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சவுதி அரேபியாவின் ஆதரவுடன் தெற்கு மற்றும் கிழக்கு ஏமனில் ஒரு சில பகுதிகளை மட்டுமே அதிபர் தரப்பு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

இந்தச் சூழலில் தான் ஏமனின் ஹவுதி படைப் போரில் நுழைவதாக அறிவித்துள்ளது. ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஹவுதி படை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும், உங்கள் கப்பல்களை எங்கள் கடல் எல்லையில் இருந்து வெளியேற்றுங்கள்.. இல்லையென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் ஏமனின் ஹவுதி எச்சரித்துள்ளது.

ஏமன் இப்போது இந்த போரில் குதிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இதுபோல நடக்கக்கூடாது என்றே பலரும் அஞ்சினர். ஒருவேளை ஏமன் சர்வதேச கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினால் அது சங்கிலி விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், இதனால் பல்வேறு நாடுகளும் கூட இந்த மோதலில் உள்ளே வரும். இது உலகப் போர் அல்லது குறைந்தது பிராந்திய போரை உருவாக்கும் ஆபத்து இருப்பதாகவே உலக நாடுகள் அஞ்சுகின்றன.

தற்போதைய சூழலில் பெரும்பாலான நாடுகள் இந்த விவகாரத்தில் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. சீனா, ரஷ்யா, பெலாரஸ் உட்பட ஒரு சில நாடுகள் மட்டுமே ஈரான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இந்தியா போன்ற சில நாடுகள் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அதேநேரம் இந்த மோதல் தொடர்ந்தால் அது இந்தியா உட்படச் சர்வதேச அளவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button