இலங்கையில் 1000க்கும் மேல் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை – நளிந்த ஜயதிஸ்ஸ

இலங்கையில் 1,139 சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை இருப்பதாகச் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
சிறப்பு மருத்துவர்களின் சேவைகள் கிடைக்க வேண்டிய 134 இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் சிறப்பு பராமரிப்பு மருத்துவமனைகளில் 2042 சிறப்பு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர் என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீரவின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ஓய்வு, ராஜினாமா மற்றும் சேவையிலிருந்து வெளியேறுதல் போன்ற பல்வேறு காரணங்களால் நாடு, 570 சிறப்பு மருத்துவர்களின் சேவைகளை இழந்துள்ளதாகக் கூறினார்.
2020 முதல் 2024 வரை 233 சிறப்பு மருத்துவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர், 82 பேர் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்.
7 பேர் ராஜினாமா செய்துள்ளனர், 57 பேர் பல்வேறு தேவைகளுக்காக வேறு நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 191 சிறப்பு மருத்துவர்கள் சம்பளமில்லா விடுப்பில் சென்றுள்ளனர் என்று அவர் கூறினார்.
தற்போதுள்ள சிறப்பு மருத்துவர்களில் 201 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், 546 பேர் 55 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.