நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து இருவர் போட்டியிட்டு, முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவில் ஏ. அஸ்பர் தவிசாளராக தெரிவு

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த ஏ. அஸ்பர் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியின் தலைமையில், இன்றைய தினம் (02) காலை 09.30 மணிக்கு சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்ற தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் ஆகியோர்களை தெரிவு செய்வதற்காக ஆணையாளரினால் ரகசிய வாக்களிப்பா அல்லது திறந்த வாக்களிப்பா என கோரப்பட்ட போது இதில் ஏழு உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பிற்கும், 06 உறுப்பினர்கள் திறந்த வாக்கெடுப்பிற்கும் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த இருவர் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இதில் ஏ. அஸ்பர் அவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் பிரேரித்திருந்தனர். அத்துடன் ஏ.எல். றியாஸ் ஆதம் அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் பிரேரித்திருந்தனர்.
இதில் ஏ. அஸ்பர் 06 வாக்குகளையும், அவரோடு போட்டியிட்ட ஏ.எல் ரியாஸ் ஆதம் ஐந்து வாக்குகளையும் பெற்றவுடன் தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் நிலை வகித்தனர்.
ஒரு மேலதிக வாக்கினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரேரித்த ஏ. அஸ்பர் அவர்கள் இரகசிய வாக்களிப்பின் மூலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை சபையின் உதவித் தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.ஐ. இர்பான் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.