ரஷ்யாவில் 49 பேருடன் பயணித்த ஒரு விமானம் வீழ்ந்து நொறுங்கியதாக உறுதி

ரஷ்யாவில் 49 பேருடன் பயணித்த ஒரு விமானம் விபத்தில் சிக்கி விழுந்து நொறுங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கிச் சென்ற பயணிகள் விமானம், திடீரென விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை இழந்தது. இதில் 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 49 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமானம் திண்டா விமான நிலையத்தை அணுகும் தருணத்தில், ரேடாரிலிருந்து காணாமல் போனதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அவசரநிலை சேவைகள் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகினர். சம்பவம் உறுதியாகியவுடன், ரஷ்யாவின் அவசரநிலை சேவைகள் மற்றும் விமானப் பாதுகாப்புத் துறைகள் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டன.
Mi-8 ரக ஹெலிகொப்டர், காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் பயன்படுத்தப்பட்டது. தற்போதைய தகவலின்படி விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் விமானப் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானம், அங்காரா எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் இயக்கப்பட்ட, ஆன்டோனோவ் வகையைச் சேர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.