சட்டத்திற்கு புறம்பாக வாகன பரிமாற்றம் செய்துள்ள இரு முக்கிய கட்சிகள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்.!

கடந்த அரசாங்கத்திலிருந்த அமைச்சர் ஒருவர் எதிர்கட்சியிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சட்டத்திற்கு புறம்பாக வாகனம் ஒன்றை விற்பனை செய்துள்ளார் என சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
களுத்துறையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்கத்திலிருந்த அமைச்சர் ஒருவர் எதிர்கட்சியிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாகனம் ஒன்றை விற்பனை செய்துள்ளார். இருவரும் பிரதான இரு கட்சிகளை சேர்ந்தவர்கள்.
அவர்கள் ஆட்சியிலிருந்தமையால் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காது இரகசியமாக சட்டத்துக்கு புறம்பாக வானக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுள்ளனர்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
களுத்துறை மாவட்டத்தில் உள்ள 10-12 சதவீதமானோர் வீடுகளின்றியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 155 குடும்பங்களுக்கு வீட்டு நிர்மாணத் திட்டத்துக்கான நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
இதற்காக 155 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் 42 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறித்த நிவாரணத் தொகையைக் கொண்டு அம்மக்கள் தமது இருப்பிடங்களை அமைத்துக் கொள்ள முடியும்.