செப்டம்பரில் ஐ.அ. இராச்சியத்தில் ஆரம்பமாகிறது ஆசியக்கிண்ணம்?

இந்தாண்டு நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பர் 5ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடத்த ஆசிய கிரிக்கெட் பேரவை திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான ஆட்டம் செப்டம்பரில் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த ஆசியக்கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணை இன்னும் சில நாட்களில் வெளியிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த மே மாதத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட இராணுவ மோதலை அடுத்து இரு நாடுகளும் மோதும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதில் சந்தேகம் எழுந்தது. எனினும் ஆசிய கிண்ண தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரி20 வடிவில் நடைபெறவுள்ள இந்தாண்டு ஆசிய கிண்ண தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்கவுள்ளன.
இதில் போட்டியை நடத்தும் நாடாக இந்தியா செயற்படும் அதேநேரம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் போட்டியை நடத்த ஏற்பாடாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியா அல்லது பாகிஸ்தானில் நடத்தும் போட்டிகளில் மற்ற நாடு பொது மைதானத்தில் ஆடும் ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்கும் சூழலிலேயே ஆசிய கிரிக்கெட் பேரவை இந்த முடிவை எடுத்துள்ளது.