ராஜிதவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல இன்று (11) உத்தரவிட்டார்.
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சமர்ப்பித்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, சந்தேக நபரை கைது செய்வதில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு எந்தத் தடையும் இல்லை என்று ஹர்ஷன கெகுனுவெல தெரிவித்தார்.
சட்டப்பூர்வமாக மீன்வள துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மணல் அகழ்வுத் திட்டத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ஒப்படைத்து, அரசாங்கத்திற்கு 2.63 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியது குறித்து விசாரணை நடத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.