Home செய்திகள்அமெரிக்கா–கனடா வர்த்தகப் போர் தீவிரம்: “அமெரிக்க வரியை டாலருக்கு டாலர் ஈடுகொடுப்போம்” – மார்க் கார்னி!

அமெரிக்கா–கனடா வர்த்தகப் போர் தீவிரம்: “அமெரிக்க வரியை டாலருக்கு டாலர் ஈடுகொடுப்போம்” – மார்க் கார்னி!

by Nabishad
0 comments

-Nabishad Abu Hanshif-

கனடா பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவுடன் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாததைத் தொடர்ந்து, அமெரிக்கா விதிக்கும் வரிகளுக்கு “டாலருக்கு டாலர்” என்ற அடிப்படையில் கனடாவும் பதிலடி வரி விதிக்கும் என உறுதியளித்துள்ளார்.

வாஷிங்டனுக்கும் அதன் நெருங்கிய கூட்டாளிகளில் ஒன்றான கனடாவுக்கும் இடையிலான சமீபத்திய உறவுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய விரிசலாக இந்த வர்த்தக மோதல் உருவெடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வர்த்தகக் கொள்கைகள் கனடா அதிகாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
வெள்ளிக்கிழமை இரு நாடுகளும் எஃகு, அலுமினியம் மற்றும் வாகனங்கள் மீதான வரிகளை குறைப்பது தொடர்பாக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருக்கமாக இருந்தன.
ஆனால், இறுதி நேரத்தில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதற்கான காரணம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டினர்.

கனடா அதிகாரிகள் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறிய பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்கா இறுதி நேரத்தில் முன்வைத்த மாற்றங்கள் “நியாயமற்றவை, பொருளாதார ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றும், எதிர்காலத்தில் எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தத்தின் மீதும் நம்பிக்கை வைப்பது தொடர்பாக கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

banner

அதேவேளை, இறுதி நேரத்தில் கூடுதல் சலுகைகளை கோரியதன் மூலம் கனடாவே ஒப்பந்தத்தை சீர்குலைத்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, பிரதமர் கார்னி தனது பேச்சுவார்த்தைக் குழுவினரை மீள அழைத்துள்ளதுடன், அமெரிக்காவின் கடுமையான வர்த்தக அணுகுமுறைக்கு அதேபோன்ற பதிலடி வழங்க கனடா தயாராகியுள்ளது. மேலும் பேச்சுவார்த்தைகள் எதுவும் தற்போது திட்டமிடப்படவில்லை.

அமெரிக்கா விதிக்கவுள்ள 50% வரிகள் தொடர்பாக பேசிய கார்னி,
“எங்கள் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக, கனடாவும் அந்த வரிகளை டாலருக்கு டாலர் என்ற அடிப்படையில் ஈடுகொடுக்கும்” என தெரிவித்துள்ளார்.
இந்த அமெரிக்க வரிகள் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கனேடிய பொருட்களை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது “கனடாவுக்கான தவறவிடப்பட்ட வாய்ப்பு” எனக் குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் அவர், இந்த வார தொடக்கத்தில் ஏற்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய கனடா மறுத்ததாகக் கூறினார்.

மேலும், கனடாவுக்கு அமெரிக்க சந்தையில் எந்தவொரு பெரிய ஏற்றுமதி நாட்டுக்கும் வழங்கப்படும் சிறந்த சலுகைகளை வழங்க அமெரிக்கா முன்வந்திருந்தபோதிலும், கனடாவின் புதிய கோரிக்கைகள் மற்றும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட சில உறுதிமொழிகளில் ஏற்பட்ட பின்வாங்கல்கள், கடந்த சில நாட்களில் உருவாக்கப்பட்ட சமநிலையை சீர்குலைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment