பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையதாக இலங்கையில் தடைசெய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியீடு..!

பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையதாக இலங்கையில் தடைசெய்யப்பட்டவர்களின் விபரங்கள் மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்ட விபரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
15 அமைப்புகள் மற்றும் 217 நபர்களின் பெயர் விபரங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம், கனேடிய தமிழர் தேசிய அவை மற்றும் டி.வை.ஓ என அறியப்படும் தமிழ் இளைஞர் அமைப்பு ஆகியன இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் எக்சியூ என்று அறியப்படுகின்ற தலைமையகக் குழு, தேசிய தௌஹித் ஜமாத், ஜமாதே மிலாதே இப்ராஹிம், விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்துபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சேவ் த பேர்ளஸ் ஆகியனவும் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.