Sri Lanka News

மத்திய கிழக்கு நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கைப் பொருளாதாரம் வலுவான நிலையில்

உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு அல்லது மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய இடமளிக்கப் போவதில்லை என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

புளூம்பெர்க் (Bloomberg) ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிடுகையில், எந்தவொரு வெளிப்புற அதிர்வுகளையும் தாங்கும் அளவிலான நிதி வலிமையை இலங்கை தற்போது அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் ஏற்படக்கூடிய எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகளுக்கு எதிராக இது ஒரு தீர்க்கமான பாதுகாப்பு உத்தியாக அமையும் என ஆளுநர் கூறுகிறார்.

கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் 70% ஆக இருந்த பணவீக்கம் தற்போது 1.6% வரை குறைந்துள்ளதால், உலக சந்தையில் விலை அதிகரிப்பு ஏற்படும் போது உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாப்பதற்கான நிதி இடைவெளி (Financial Space) மத்திய வங்கிக்கு உள்ளது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னர் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு வெளிநாட்டு அந்நியச் செலாவணி இல்லாமையினால் ஏற்பட்டது என்ற போதிலும், தற்போதைய அபாய நிலைமை உள்நாட்டு நிதிப் பற்றாக்குறையினால் ஏற்படுவது அல்ல எனவும், உலகளாவிய விநியோகத்தில் நிலவும் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர் விளக்கமளித்தார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர், அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளி மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக டிசம்பர் மாத மீளாய்வு தாமதமடைந்த போதிலும், மார்ச் 15 ஆம் திகதியளவில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அதன் அடிப்படையில் மே மாதத்தில் அடுத்த தவணையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அடுத்த தவணையை விடுவிப்பதற்காக எதிர்வரும் மே மாதத்திற்குள் IMF செயற்குழுவின் அங்கீகாரத்தைப் பெறுவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டார்.

சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி சுமார் 5% ஆக இருக்கும் என மத்திய வங்கி நம்புவதாகவும், இது IMF முன்னறிவித்த 2% மதிப்பை விட அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், மத்திய கிழக்கு மோதல்கள் நீண்ட காலம் தொடர்ந்தால் உலகளாவிய வர்த்தகத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற போதிலும், இலங்கையின் தற்போதைய நிதி நிலைமையின்படி அந்தச் சூழல்களைக் கட்டுப்படுத்த முடியும் என ஆளுநர் மேலும் உறுதிப்படுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button