Sports

இந்தியா – பாகிஸ்தான் மோதும் இன்றைய போட்டி: ஜனாதிபதியின் உத்தரவில் கொழும்பில் பலத்த பாதுகாப்பு!

கொழும்பில் இன்று நடைபெறவுள்ள இந்திய – பாகிஸ்தான் இடையிலான டி20உலகக்கிண்ணப் போட்டிக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்த விசேட பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன்படி, கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2,800 பொலிஸ் அதிகாரிகள், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) மற்றும் அரச புலனாய்வுச் சேவை (SIS) அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மைதானத்தின் முழுமையான பாதுகாப்பு மற்றும் வீரர்கள், இராஜதந்திரிகளின் பாதுகாப்பிற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) பொறுப்பேற்றுள்ளது.

மேலும் 750 இராணுவத்தினரும், கொமாண்டோ படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன் (Drone) கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அனுமதியற்ற ட்ரோன்களைத் தடுக்க ஜாமர்கள் (Jammers) பயன்படுத்தப்படுகின்றன. இணையவழி தாக்குதல்களைத் தடுக்க சைபர் குற்றத்தடுப்புப் பிரிவின் விசேட குழுவும் களமிறக்கப்பட்டுள்ளது.மைதானத்தைச் சுற்றி வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை. ரசிகர்கள் மைதானத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒதுக்கப்பட்ட வாகன தரிப்பிடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

வாகன தரிப்பிடங்களிலிருந்து மைதானத்திற்கு ரசிகர்களை அழைத்து வர விசேட ஷட்டில் (Shuttle) பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், போட்டி முடிந்து கடைசி ரசிகர் வெளியேறும் வரை இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இந்தப் போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் முன்னர் அறிவித்திருந்தாலும், ஜனாதிபதி அநுர குமாரவின் இராஜதந்திர முயற்சிகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி விளையாடச் சம்மதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button