அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடக பயன்பாட்டுக்கான தடைச் சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சந்தேகத்திற்குரிய 7.56 இலட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, சந்தேகத்திற்குரிய 4.62 இலட்சம் இன்ஸ்டாகிராம் கணக்குகளையும், 2.94 இலட்சம் ஃபேஸ்புக் கணக்குகளையும் செயலிழக்கச் செய்துள்ளது.
சிறார்களின் உடல் மற்றும் உளநலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவுஸ்திரேலிய அரசு இந்தக் கட்டுப்பாட்டுச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
இந்தத் தடையை மீறும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச அபராதத் தொகையை 99 மில்லியன் அவுஸ்திரேலிய டொலராக (69.75 மில்லியன் அமெரிக்க டொலர்) இரட்டிப்பாக்க அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.
இந்தச் சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற விசாரணைகளின் போது, மெட்டா, டிக்டொக், கூகுள் (யூடியூப்) மற்றும் ஸ்னாப்சாட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் சாட்சியமளிக்க உள்ளனர்.
பயனர்களின் பதிவுகள், பிறந்தநாள் விவரங்கள் மற்றும் பாடசாலைகளில் கல்விகற்கும் தரம் தொடர்பான தகவல்களை பகுப்பாய்வு செய்வதற்கு செயற்கை நுண்ணறிவை (AI) மெட்டா பயன்படுத்தி வருகிறது. அத்துடன், முடக்கப்பட்ட கணக்குகளின் உரிமையாளர்கள் மீண்டும் புதிய கணக்குகளை உருவாக்குவதையும் மெட்டா தடுத்து வருகிறது.

