Home இலங்கைச் செய்திகள்அருட்பணி ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் வின்சன் விமலதாஸ் காணாமலாக்கப்பட்டு 20ஆம் ஆண்டு நினைவு!

அருட்பணி ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் வின்சன் விமலதாஸ் காணாமலாக்கப்பட்டு 20ஆம் ஆண்டு நினைவு!

by Nabishad
0 comments

க.டினேஸ்

அருட்பணி ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமலாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி அமைதிப் பேரணியும் நினைவேந்தல் நிகழ்வும் திருப்பலி ஒப்புக்கொடுத்தலும் இடம்பெற்றன.

அல்லைப்பிட்டிச் சந்தியிலிருந்து ஆரம்பமான அமைதிப் பேரணியில் அல்லைப்பிட்டிப் பங்குமக்கள், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், யாழ் மறைமாவட்டக் குருக்கள் மற்றும் துறவிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். பதாகைகளைத் தாங்கியவாறு, காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அமைதியாகப் பேரணியாகச் சென்ற மக்கள், அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தை வந்தடைந்தனர்.

தொடர்ந்து நினைவேந்தல் சுடர் ஏற்றப்பட்டு, அருட்பணி ஜிம் பிறவுண் அடிகளாரையும், காணாமலாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட உறவுகளையும் நினைவுகூரும் உரைகளும் அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றன.

banner

“காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்; உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும்” என்ற வலியுறுத்தலுடன், நீதி சமாதான ஆணைக்குழுவினரால் ஐக்கிய நாடுகள் சபையிடம் நீதியை வழங்குமாறு கோரும் அறிக்கையும் வாசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அருட்பணி றெக்ஸ் சௌந்தரா அவர்களின் தலைமையில் கூட்டுத் திருப்பலி பக்தி உணர்வுடன் ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருப்பலியில் காணாமலாக்கப்பட்டவர்களின் ஆன்ம இளைப்பாறுதலுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலும் வலிமையும் கிடைக்கவும், உண்மை வெளிப்பட்டு நீதி நிலைநாட்டப்படவும் சிறப்பாக மன்றாடப்பட்டது.

இருபது ஆண்டுகள் கடந்தும் மறையாத நினைவுகளும், விடைபெறாத கேள்விகளும், நீதி வேண்டி காத்திருக்கும் குடும்பங்களின் எதிர்பார்ப்புகளும் இந்நிகழ்வின் ஊடாக மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தப்பட்டன. காலம் கடந்து சென்றாலும், உண்மைக்கான தேடலும் நீதிக்கான குரலும் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் என்பதே இந்நிகழ்வின் ஆழமான செய்தியாக அமைந்தது.

இந்நிகழ்வுகளை அல்லைப்பிட்டிப் பங்கு மக்கள் ஒன்றிணைந்து சிறப்பாக ஒழுங்கமைத்து, அர்ப்பணிப்புடன் முன்னெடுத்திருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு, காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுடன் துயரத்திலும் நீதிக்கான பயணத்திலும் ஒன்றிணைந்த அனைவருக்கும் எமது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

You may also like

Leave a Comment