பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவசர வேண்டுகோள்!
இந்து சமுத்திரத்தில் எல்நினோ ஆதிக்கம் காரணமாக மழைவீழ்ச்சி குறையும் அபாயம் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிக வலுவான எல்நினோ தொழிற்படத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக அதிகரித்து பிளஸ் 0.64 என்ற அளவில் இருந்த இந்து சமுத்திர இருமுனையின் அளவு இவ்வாரம் மிகச் சடுதியாக பிளஸ் 0.18 என்ற அளவில் குறைவடைந்துள்ளது. இது முற்றிலும் எதிர்பாராத ஆச்சரியமான ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகின்றது. மிக வலுவான எல்நினோ இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதையே இது காட்டுகின்றது. இந்து சமுத்திர இருமுனையினைச் சுருக்கும் அல்லது வலுக்குறைக்கும் அளவுக்கு எல்நினோ தொழிற்படுவது வானிலை ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது.
இந்து சமுத்திர இருமுனையின் நேர் பெறுமானம் வலுவாக இருந்தால் மட்டுமே ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் போதுமான மழை கிடைக்கும். ஆனால் எல்நினோவின் காரணமாக இந்து சமுத்திர இருமுனை வலுக்குறைந்தால், கனமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மிகக் குறைந்த மழையே கிடைக்கும். இது தென்மேற்கு இலங்கையில் பருவக்காற்று காலத்தில் மழை கிடைக்காத அல்லது குறைந்த மழை கிடைத்த பகுதிகளில் மிகப்பெரிய நீர் நெருக்கடியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
எனவே இந்த இந்து சமுத்திர இருமுனை பெறுமானப் போக்கை மிக உன்னிப்பாக அவதானிக்க வேண்டியுள்ளது. செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதி வரை இதனை அவதானித்து அதன்பின்னரே ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கிடைக்கவிருக்கும் மழை பற்றி மிக உறுதியான தீர்மானத்துக்கு வர இயலும். எல்நினோ மிக உறுதியாகத் தொழிற்பட்டு இந்து சமுத்திர இருமுனை வலுவற்ற நேர்மறை அல்லது எதிர்மறை பெறுமானத்தைக் கொண்டிருந்தால் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மிக மிக குறைவான அளவே மழை கிடைக்க வாய்ப்புள்ளது.
எனவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எல்நினோவின் தன்மையும் இந்து சமுத்திர இருமுனையின் விருத்தியும் தொடர்ந்து அவதானிக்கப்பட்டு செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியிலேயே ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கிடைக்கவுள்ள மழை பற்றிய இறுதித் தீர்மானத்தை எட்ட முடியும். இது முன்னைய எதிர்வுகூறல்களுக்கு முற்றிலும் மாறானதாகும். எவ்வாறாயினும் தற்போதைய இந்து சமுத்திர இருமுனையின் திடீர் வீழ்ச்சிப் போக்கு வானிலையைப் பொறுத்தவரை உசிதமானதல்ல.
இந்து சமுத்திர இருமுனையின் பெறுமானம் செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் எவ்வாறு இருக்கும் என்பதிலேயே இவ்வாண்டின் இரண்டாவது இடைப்பருவ மழையும் வடகீழ்ப் பருவக்காற்று மழையும் தங்கியுள்ளது. இந்த இரண்டு பருவ மழையுமே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வாழ்வையும் வளத்தையும் தீர்மானிக்கும் என்பதுடன், அனைத்து நீர்தேவைகளும் இந்த இரண்டு பருவ மழையினாலுமே பூர்த்திசெய்யப்படுகின்றன. தற்போது இருக்கும் தரைக்கீழ் மற்றும் தரை மேற்பரப்பு நீர் வளமே நிச்சயமானது என்பதால், கோயில்களின் பெருந்திருவிழாக்கள், அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறைக்காலம் நிறைந்துள்ள இக்காலப்பகுதியில் நீரை வீண்விரயம் செய்யாமல் கவனமாகப் பயன்படுத்துமாறு பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

