Sri Lanka News

நிப்பா வைரஸ் தொடர்பில் அச்சம் வேண்டாம்: சுகாதார பிரதி அமைச்சர் உறுதி!

இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் குறித்து இந்நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

குறித்த வைரஸ் தொடர்பாக இந்நாட்டு சுகாதாரப் பிரிவினர் தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிப்பா என அழைக்கப்படும் இந்த வைரஸ் ஆசிய பிராந்தியம் ஊடாக பரவக்கூடும் என தெரியவந்துள்ள நிலையில், ஆசிய பிராந்தியத்தின் பல நாடுகள் இது குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளன.

தாய்லாந்து, சிங்கப்பூர், ஹொங்கொங் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இது தொடர்பாக விமான நிலையப் பரிசோதனைகளையும் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து தொற்றும் ஒரு வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதன் இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை இருப்பதாகக் கூறப்படுகிறது.

நிப்பா வைரஸ் மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவக்கூடியது என்றாலும், அதன் கடத்தல் மிகக் குறைந்த அளவிலேயே இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிய பிராந்திய நாடுகளைப் போன்றே இலங்கையும் இந்த வைரஸ் தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளதுடன், இது குறித்து எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கைக்கு தற்போது இதனால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. வரலாற்றில் இது ஒருபோதும் பெருந்தொற்றாக பரவவில்லை. எனவே நாம் வீணாக அச்சப்படத் தேவையில்லை.

அதேபோல், இந்த வைரஸ் இருக்குமோ என சந்தேகிக்கப்படும் நபர்களைப் பரிசோதிப்பதற்குத் தேவையான பரிசோதனை உபகரணங்கள் இலங்கையிடம் உள்ளன.

இவ்வாறான வைரஸ் பரவும்போது, இலங்கைக்கு அதன் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து மிக நெருக்கமாக ஆய்வு செய்கிறோம். இதுவரை எந்தவொரு நோயாளியும் பதிவாகவில்லை.

நோய்வாய்ப்பட்ட ஒருவர் விமானத்தில் ஏறி வரும் அளவிற்குச் சிறந்த ஆரோக்கிய நிலையில் இருக்க மாட்டார்.

எனவே, நோயுள்ளவர்கள் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அதனால் பயப்பட வேண்டாம்.” “பெருந்தொற்று நிலைமை இருக்கும்போது, வைரஸ் ஒன்று நபர்களுக்கு இடையில் பரவக்கூடிய வாய்ப்பு இருக்கும்போதே நாம் அவ்வாறான பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். உண்மையில் இந்த வைரஸ் தொற்றுள்ள ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்படுவார்.

அத்தகையவர்கள் விமானத்தில் வரும் அளவிற்குத் திறன் கொண்டிருக்க மாட்டார்கள். இது மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவக்கூடிய வாய்ப்பு மிகக் குறைவு. எனவே இதற்கு எவ்விதத்திலும் அச்சப்படத் தேவையில்லை.

இதற்காக தேவையற்ற முறையில் பணத்தையோ நேரத்தையோ செலவிட வேண்டிய அவசியமில்லை.” இதன்போது, அவ்வாறான பரிசோதனைகள் செய்வதற்கானத் தேவை இல்லை என விஜேமினி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button