உலகில் தேனிலவு கொண்டாடச் சிறந்த இடங்கள்; பட்டியலில் 3 இடங்களைப் பெற்றுள்ள இலங்கை

ட்ரிப் அட்வைசர் தளம் வெளியிட்டுள்ள “2026 ட்ராவலர்ஸ் சொய்ஸ் – பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்” (Travelers’ Choice Best of the Best) விருதுகளின் பட்டியலில், தேனிலவு கொண்டாடுவதற்கு ஏற்ற உலகின் சிறந்த 10 இடங்களின் வரிசையில் இலங்கை இடம் பிடித்துள்ளது.
அதன்படி இலங்கையின் சிறப்பு மிக்க காலி நகரம் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
அந்த அறிக்கையில் சிறந்த 25 இடங்களில் 13 ஆவது இடம் எல்ல (Ella) நகருக்கும், 22 ஆவது இடம் தங்காலை நகருக்கும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பயணிகளின் விமர்சனங்கள் மற்றும் தரவரிசைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காடுகளும் கடலும் சந்திக்கும் இந்தோனேசியாவின் பாலி தீவு முதலாவது இடத்தை பிடித்துள்ளது.
தம்பதியினருக்கான மலர் குளியல் மற்றும் சாகசப் பயணங்களுக்கு இது மிகவும் பெயர் பெற்றது ஆகும்.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மொரிஷியஸ் தீவு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
அதன் ஏழு வண்ண மண் (Chamarel Seven Colored Earths) மற்றும் படகுப் பயணங்களுக்காக இந்த தீவு விரும்பப்படுகிறது.
மூன்றாவதாக கடலுக்கு நடுவே உள்ள வில்லாக்கள் மற்றும் கடற்கரை இரவு உணவுகளுக்குப் புகழ்பெற்ற மாலைத்தீவு.
நான்காவதாக எரிமலைச் சேறு குளியல் மற்றும் நீர்வீழ்ச்சிகளுடன் கூடிய இயற்கை எழில் கொஞ்சும் தங்கும் விடுதிகளுக்கு பெயர் பெற்ற கரீபியன் கடலின் புனித லூசியா என்ற இடம் ஆகும்.
ஐந்தாவதாக இலங்கையின் காலி நகரம் ஆகும்.
இதனையடுத்து ஆறாவதாக வியட்நாமின், ஹுயே (Hue). ஏழாவதாக கலிபோர்னியா, நாபா (Napa) எட்டாவதாக இத்தாலியின் போசிடானோ (Positano), ஒன்பதாவதாக கென்யாவின் வடாமு (Watamu), பத்தாவதாக ஆன்டிகுவா (Antigua) ஆகிய இடங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
இலங்கையின் வனவிலங்கு சுற்றுலா, தங்க நிற கடற்கரைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் இருக்கும் காலி நகரம் இந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




