Sri Lanka News

‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்: ஜனாதிபதி அநுர தலைமையில் நாளை அங்குரார்ப்பணம்!

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நாளை (13) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாக லோட்டஸ் அரங்கில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகள் , தனியார் மற்றும் அரச சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் உட்பட இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் பாதித்த டித்வா சூறாவளி அனர்த்தத்திற்குப் பின்னரான புனர்வாழ்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உயர் மட்ட, நன்கு ஒருங்கிணைந்த தேசிய மீட்பு பொறிமுறையின் விரைவான மற்றும் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நாட்டின் மீள்கட்டமைப்புத் திட்டத்திற்கு தற்போது மூன்று மூலோபாய அணுகுமுறைகளின் கீழ் நிதியளிக்கப்படுகிறது.

அதன்போது, முக்கியத்துவத்தின் அடிப்படையில் மீள் ஒழுங்கமைப்பு (Re-purposing) செய்முறையின் கீழ் தற்போது செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களின் நோக்கங்களை மாற்றி செயற்படுத்தல், மறு ஒதுக்கீட்டின் (Re-allocating) கீழ் நிதி முகாமைத்துவச் சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமான தொகையை ஒதுக்குதல் என்பன மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்காக 500 பில்லியன் ரூபா குறைநிரப்புப் பிரேரணை முன்வைப்பு மற்றும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு, அரச மற்றும் தனியார் நன்கொடையாளர்களின் ஆதரவு பெறப்படும்.

இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்று ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் மூலோபாய தலைமைத்துவம், ஒருங்கிணைப்பு, நிறுவன அணுகுமுறை மற்றும் மேற்பார்வை ஆகியவற்றிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில், அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட 25 உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி அண்மையில் நிறுவினார்.

இதன் மூலம் அடிப்படைத் தேவைகள், சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை மீண்டும் நிறுவுதல், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புதல், வாழ்வாதாரங்கள் மற்றும் சொத்துக்களை போதுமான அளவு அதிகரித்தல், உள்நாட்டு பொருளாதாரத்தை மீட்டெடுத்தல், டிஜிட்டல் தரவு கட்டமைப்புகள் மற்றும் தீர்மானங்களை எடுப்பதற்கு ஆதரவளிக்கும் பொறிமுறைகளை நிறுவுதல், தொடர்பாடல் மற்றும் பங்குதாரர் உறவுகளை மேம்படுத்துதல் ஆகிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த வழிகாட்டல், மூலோபாய முடிவெடுத்தல், அமைச்சுகளுக்கு இடையேயான பிரச்சினைகளைத் தீர்த்தல், முக்கிய நிதியளித்தல் மற்றும் மீட்பு மற்றும் மீள்கட்டமைப்பில் முடிவெடுத்தல்களுக்கு வழிகாட்டல் என்பன மேற்கொள்ளப்படும்.

மேலும், பிரதான குழுவின் முடிவுகளை செயல்படுத்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணிக்க, தொடர்புடைய துறைசார் அமைச்சரின் தலைமையில் உப குழுக்களும் நிறுவப்பட உள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button