சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்தவும், மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் உள்ள 580 மின்மாற்றிகளில் 473 மின்மாற்றிகள் அனர்த்தம் காரணமாக சேதமடைந்துள்ளதாகவும், தற்போது அவை சீரமைக்கப்பட்டு வருவதாகவும், நாளைய (08) தினத்திற்குள் மாவட்டத்தில் மின் விநியோகம் முழுமையடையும் என்றும் மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், 49,000 நீர் விநியோகங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றில் சுமார் 99% தற்பொழுது சீரமைக்கப்பட்டுள்ளதாவும், எஞ்சியவற்றுக்கு பவுசர்கள் மூலம் நீர் வழங்கப்பட்டு வருவதாகவும், அடுத்த 02 நாட்களுக்குள் நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சேதமடைந்த சமூக நீர் வழங்கல் திட்டங்கள் தற்போது மீண்டும் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகள் கடற்படையின் உதவியுடன் தற்போது நடைபெற்று வருகின்றன. பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் சமூகத்தின் பங்களிப்புடன் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
சோளம் மற்றும் ஏனைய பயிர்களுக்கான இழப்பீடு வழங்கி பயிற்செய்கை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது, கால்நடை வளர்க்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மறுசீரமைத்தல், சுகாதார சேவைகளை மீளமைப்பது மற்றும் சேதமடைந்த மதஸ்தலங்களை அபிவிருத்தி செய்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் 228 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. அந்த வீடுகள் இருந்த இடங்களில் மக்கள் மீள்குடியேற்றுவதா அல்லது வேறு இடத்தில் மீள்குடியேற்றுவதா என்பது குறித்த துல்லியமான தரவுகளைப் பெற்று குறித்த காணிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளைத் தொடங்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
டிசம்பர் 16 ஆம் திகதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியுமாக இருக்கும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு திறைசேரியால் வழங்கப்பட உள்ள 15,000 ரூபாவை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்கவும், அதற்கான பட்டியலை உடனடியாகத் தயாரிக்கவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் அரச அதிகாரிகள், பொலிஸார் மற்றும் முப்படையினரின் பங்களிப்பிற்கு குறித்து ஜனாதிபதி இதன் போது நன்றி தெரிவித்தார்.




