News

350 மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை! விசேட செயலியை அறிமுகப்படுத்தவும் திட்டம்

அத்தியாவசிய சிகிச்சைகளை மக்களுக்கு மேலும் மலிவு விலையில் கிடைக்கச் செய்யும் நோக்குடன், 350 வகையான மருந்துகளுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டார்.

ஒழுங்குபடுத்தப்பட்ட விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்வதன் மூலம் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும்,

இதன்மூலம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்படப் பல முக்கியமான மருந்துகளின் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உதாரணமாக, புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பேக்லிடேக்செல் (Paclitaxel) மருந்தின் ஒரு குப்பியின் விலை 42,000 ரூபாவிலிருந்து 26,332 ரூபாய் 29 சதமாகவும் குடற் புழுத் தொற்றுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Mebendazole 500 mg (மெபெண்டசோல்) மாத்திரையின் விலை 83 ரூபாவிலிருந்து 50 ரூபாய் 25 சதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை நிர்ணயப் பொறிமுறை தொடரும் என்றும், புதிதாகப் பதிவுசெய்யப்படும் மருந்துகளுக்கும், உரிமம் புதுப்பிக்கப்படும் மருந்துகளுக்கும் புதிய கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், நுகர்வோர், மருந்துகள் மற்றும் அவற்றின் விலையை எளிதாக அறிந்துகொள்ள ஒரு கைபேசி செயலியை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், மருந்தகங்கள் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் மருந்துகளை விற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button