இந்தியாவுக்கு புதிய அமெரிக்க தூதர் நியமனம்: நெருங்கிய உதவியாளரை நியமித்த டிரம்ப்

தற்போது வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி பணியாளர் அலுவலகத்தின் இயக்குநராக இருக்கும் கோர், பதவி உறுதிப்படுத்தப்படும் வரை அந்தப் பதவியில் நீடிப்பார் என்று டிரம்ப் ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது 2-வதாக பதவியேற்ற பின்னர், இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமிப்பதாக ட்ரூத் சோஷியல் தளத்தில் அறிவித்துள்ளார். இந்தியாவின் அமெரிக்க தூதராக இருந்த, எரிக் கார்செட்டி ஜனவரி மாதம் தனது பதவியை விட்டு வலகியதை தொடர்ந்து காலியாக இருந்த இந்த இடத்திற்கு, 38 வயதான கோர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை டிரம்ப் “எனது சிறந்த நண்பர்” மற்றும் “முழுமையாக நம்பக்கூடிய நபர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உஸ்பெகிஸ்தானில் 1986-ல் பிறந்த செர்ஜியோ கோர், சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த தாஷ்கண்ட் நகரைச் சேர்ந்தவர். 1999-ல் தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு முன்பு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். கோர், கடந்த காலத்தில் செனட்டர் ஜான் மெக்கெய்ன், ராண்ட் பால் ஆகியோரின் அரசியல் ஆலோசகராகவும், செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பின்னர், அவர் டிரம்பின் அரசியல் பயணத்தில் இணைந்த அவர், டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியருடன் இணைந்து டிரம்பின் வெற்றி பெற்ற புத்தகங்களை வெளியிடும் ‘வின்னிங் டீம் பப்ளிஷிங்’ நிறுவனத்தை நிறுவினார். அத்துடன், டிரம்பின் அரசியல் நடவடிக்கைகளுக்காக ‘ரைட் ஃபார் அமெரிக்கா’ என்ற அரசியல் குழுவையும் (Super PAC) வழிநடத்தினார்.
இதனிடையே, இந்தியாவுக்கான அமெரிக்க தூராக இந்த நியமனம் ஒரு முக்கியமான தருணத்தில் வந்துள்ளது. டிரம்ப் நிர்வாகம், இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை வெகுவாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதே இந்த வரிவிதிப்புக்கு முக்கியக் காரணம் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், டிரம்பின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் இந்தியாவின் தூதராகப் பொறுப்பேற்பது, புதிய சவால்களையும், அதே நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நேரடித் தொடர்புகளையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செர்ஜியோ கோர், இதற்கு முன்பு வெள்ளை மாளிகையின் அதிபர் பணியாளர் அலுவலகத்தின் இயக்குனராக இருந்தார். இந்தப் பதவியில், “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” கொள்கையின் கீழ் சுமார் 4,000 பேரை சாதனை நேரத்தில் பணியமர்த்தியதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நம்பகமான நபர்களைத் தேர்ந்தெடுப்பதில் கோர் முக்கியப் பங்காற்றியுள்ளார். இந்த நியமனம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ, கோர் ஒரு சிறந்த தூதராக இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதே சமயம், அமெரிக்க நாடாளுமன்றம் (Congress) இந்த நியமனத்தை எப்போது உறுதி செய்யும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், புதுடெல்லி இந்த பதவியை விரைவில் நிரப்புவதற்கு ஆர்வமாக உள்ளது. மேலும், இந்த நியமனம் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதர் பதவியையும் இணைத்து வழங்குகிறது. இது ஒரு வழக்கத்திற்கு மாறான அணுகுமுறை என்பதால், இந்தப் புதிய பொறுப்பின் முழுமையான நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
செர்ஜியோ கோரின் நியமனம் சில சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியான எலான் மஸ்க், கோரை ஒருமுறை “பாம்பு” என்று குறிப்பிட்டுள்ளார். கோர், மஸ்க்கின் நண்பரான ஜாரெட் ஐசக்மேன் என்பவரின் நியமனத்தைத் தடுக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் டிரம்ப் மற்றும் மஸ்க் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இருப்பினும், கோரின் இந்த நியமனம் டிரம்புக்கு அவர் எவ்வளவு நம்பிக்கைக்குரியவர் என்பதைக் காட்டுகிறது.