வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை – பிமல் ரத்நாயக்க

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம், முச்சக்கர வண்டிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை கொண்டிருக்கவில்லை என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள், இலகுரக வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன என்று தெளிவுபடுத்தினார்.
சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாட்களில் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் ஏற்றிச் செல்லப் பயன்படுத்தும் இலகுரக வாகனங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
பொதுப் போக்குவரத்தாகக் கருதப்படும் எந்த வாகனத்தையும் அவர்கள் செலுத்த முடியாது, என்று அவர் கூறினார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு முச்சக்கர வண்டிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதில்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், முச்சக்கர வண்டித் துறையில் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் அநீதியைக் கருத்தில் கொண்ட பின்னரே இது வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலும், வேரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறை அலுவலகத்திலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கும்போது மேற்கூறிய விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுகின்றன என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்