அணு ஆயுத மிரட்டல்களை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது…!

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று (15) கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை பிரதமர் ஏற்றி வைத்தார். 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.
செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக் கொடிக்கு இராணுவ உலங்கு வானூர்தி மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஒப்ரேஷன் சிந்தூர் என எழுதப்பட்ட கொடியுடன் பறந்த உலங்கு வானூர்தி இருந்து தேசியக் கொடிக்கு பூக்கள் தூவப்பட்டன.
செங்கோட்டையில் 12 ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, “5 ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு கலங்கரை விளக்கம் போல் நமக்கு பாதையை காட்டி வருகிறது. மூவர்ணக்கொடி என்பது வெறும் கொடி அல்ல, அது நம் நாட்டின் பெருமை.
மதத்தை கேட்டு அப்பாவி மக்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஒழிக்க இராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை தகர்த்துள்ளது நமது இராணுவம். பயங்கரவாதத்திற்கு பண உதவி செய்தவர்களும் அழித்து ஒழிக்கப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி தந்துள்ளது. நமது ஹீரோக்கள் பயங்கரவாதிகளை தண்டித்து தக்க பாடம் புகட்டினர். அணு ஆயுத மிரட்டல்களை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது.
ஒப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட அனைத்து வீரர்களுக்கு வணக்கத்தை செலுத்துகிறேன்” என அவர் கூறினார்.