மன்னார் காற்றாலை திட்டம்: பிரச்சினை தீர்க்க கலந்துரையாடல்

முன்மொழியப்பட்ட மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக, அப்பகுதியின் மதப் பிரதிநிதிகள், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் பிரதிநிதிகளுடன் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டேன்.
அதன்போது, தற்போது நடைபெற்று வரும் 20 மெகாவோட் மற்றும் முன்மொழியப்பட்ட 50 மெகாவோட் திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.
நாட்டின் பொருளாதாரத்தில் வலுசக்தி மிக முக்கியமான காரணியாக இருப்பதால், அத்தகைய சூழ்நிலையில் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, எந்தவொரு திட்டத்திலும் அப்பகுதி மக்களின் கருத்துக்களைக் கேட்பதற்கும், அவர்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை வழங்கவும் அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தேன்.
ஒரு முறையான கட்டமைப்பின் மூலம் நடைபெறும் கலந்துரையாடல்கள் ஊடாக ஒரு மாதத்திற்குள் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவும், அதுவரை குறித்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தவும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும், இல்மனைட் படிவுகள் தொடர்பான பரிந்துரைகள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கைகளை நிறைவேற்றாமல் தொடர்ந்தும் செயல்படுத்தப்படாது என்பதையும் வலியுறுத்தினேன்.
மேலும், மன்னார் பகுதியில் வீதி அபிவிருத்தி மற்றும் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பான திட்டங்களுக்கு எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதையும், வட மாகாண மக்களின் காணி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொடர்புடைய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்பதையும், அதன் மூலம் விஞ்ஞான ரீதியான தீர்வைப் பெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினேன்.
