Sri Lanka News

சுகாதார, ஊடக அமைச்சின் திட்டங்கள் குறித்து பரிசீலனை

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் உள்ள 04 திணைக்கலன்களில் உள்ள 41 நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்துவதற்கான தற்போதைய திட்டங்கள் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்தார். தற்போது 30,000 பேருக்கு 01 என்ற விகிதத்தில் இயங்கும் ஆரம்ப சுகாதார சேவையை 10,000 பேருக்கு 01 என்ற விகிதத்தில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய தொழில்நுட்ப மற்றும் சமூக நிலைமைகளுக்கு ஏற்ப சுகாதார சேவையில் நிறுவன மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டங்கள் இங்கு ஆராயப்பட்டது. சுகாதாரத் துறையின் கட்டுமானங்கள் மற்றும் அதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

சுகாதாரத் துறையில் தற்போது எழுந்துள்ள ஒரு பாரிய பிரச்சினையான ஆயுர்வேதத் துறையை உள்ளடக்கிய கொள்முதல் வழிகாட்டுதல்களை புதுப்பிப்பது குறித்தும் ஆராயப்பட்டது, அதே நேரத்தில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மருந்துகளை கொள்வனவு செய்யும் போது மருந்துகளின் தரத்தை உறுதி செய்வது தொடர்பான வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.

தேசிய இரத்தமாற்று சேவை போன்ற சேவைகளுக்கு தேவையான வாகனங்களை இந்த வருடத்திற்குள் கொள்வனவு செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நவீன தொழில்நுட்பம் மற்றும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப சுகாதார சேவையின் பௌதீக மற்றும் மனித வளங்களை மாற்ற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டு ஒரு தேசிய சுகாதாரக் கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

வெளிநாட்டு உதவி மற்றும் நன்கொடைகளின் கீழ் பெறப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்தி அவற்றினால் எதிர்பார்க்கும் பயனை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மாகாண சபை மட்டத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளை கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்து வைப்பது குறித்தும் இதன் போது பரிந்துரைக்கப்பட்டது.

சுகாதாரத் துறையில் வழங்கப்படும் நன்கொடைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மானியங்களை வழங்கும் மற்றும் பெறும் நபர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் முன்மொழியப்பட்டது.

தற்போது நாட்டின் 272 இடங்களில் செயற்படுத்தப்படும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையை மேலும் விரிவுபடுத்தி அதனை 400 இடங்கள் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

வெகுஜன ஊடக அமைச்சு தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. சமூக மனப்பாங்குகளின் மாற்றத்தில் தலையிடுவது அரச ஊடகங்களின் பொறுப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

எனவே, சமூக மனப்பாங்குகளின் மாற்றத்திற்கு பங்களிக்கும் வகையில் பொருத்தமான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு அரச ஊடகங்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று கூறினார்.

தபால் சேவையை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிப்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. கூரியர் சேவைகள் போன்ற சேவைகளை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றி தபால் சேவையை புதிய மாதிரிக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

தேவையான திட்டங்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமையே முன்பிருந்த பிரச்சினை என்றும், அந்த நிலைமையை மாற்றுவதற்காக, கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து துறைகளுக்கும் போதுமான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். குறிப்பிட்ட நிதியாண்டில் குறிப்பிட்ட திட்டங்களுக்கு அந்த ஒதுக்கீடுகள் அனைத்தையும் முறையாகப் பயன்படுத்தி, மக்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர்களான ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button