சம்மாந்துறையில் இடர் முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

மஜீட். ARM
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலகம் சார்பில், இடர் முகாமைத்துவம் மற்றும் அவசரகால பதில் நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (29) சம்மாந்துறை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12:00 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாரை மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.எம். றியாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர், பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, திணைக்களத் தலைவர்கள், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோகதகர் ஏ.எம்.எம் நஜீப், நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் ஆர்.வேல்கஜன் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக அமைப்புத் தலைவர்கள், கிராம உத்தியோகத்தர்கள், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பிரதேச செயலாளர் வரவேற்புரை ஆற்றினார். பின்னர், இடர் முகாமைத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து சம்மாந்துறை பிரதேச சபையின் தலைவரால் உரை நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து, இடர் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் சம்மாந்துறை நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் ஆகியோர் இடர் குறைப்பு மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.
இதேவேளை, வெள்ளப்பெருக்கு தடுப்பு, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள், மற்றும் முன்னெச்சரிக்கை அறிவித்தல் பரப்புதல் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில், பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவின் செயல்பாடுகள், அவசரகால பதிலளிப்புக்கான தயார்நிலை, மற்றும் பள்ளி பேரிடர் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
