அமெரிக்க விசா கட்டணம் உயர்வு

அமெரிக்கா தனது விசா நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், விசா கட்டணத்தையும் இரண்டரை மடங்கு உயர்த்தியுள்ளதாக அமெரிக்கச் செய்திகள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து, விசா வழங்குவதில் பல நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளார்.
இந்தநிலையில், ‘பிக் பியூட்டிபுல் பில்’ (Big Beautiful Bill) எனப்படும் அரச செலவீனம் தொடர்பான சட்டமூலம் சமீபத்தில் நிறைவேறியது.
இதற்கு ட்ரம்பும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின்படி, விசா கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.
இதன்படி, குடியேற்றம் அல்லாத, மாணவர், தொழில், சுற்றுலா போன்ற விசாக்களுக்கான கட்டணங்களுடன், ‘இன்டகிரிட்டி’ (Integrity) எனப்படும் நேர்மைக் கட்டணமாக, 250 டொலர் கூடுதலாக வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தவிர, மேலும் சில கூடுதல் கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை, 2026 இல் இருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை, அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் எனவும், இந்தக் கூடுதல் கட்டணம், நிபந்தனைகளின் அடிப்படையில் நாடு திரும்பும்போது திருப்பித் தரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த கட்டணங்கள், விலைவாசியுடன் தொடர்புடையவை என்றும், அதனால் ஆண்டுக்கு ஆண்டு கட்டணத் தொகையில் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.