Sri Lanka News

களுத்துறை மாவட்டத்தில் 915 வீடுகளை நிர்மாணிக்க 1,200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு; 118 பயனாளிகளுக்கு வீடமைப்பு உதவி காசோலைகள் வழங்கி வைப்பு

(Nabishad Abu Hanshif)

தேசிய வீடமைப்புத் திட்டம் – 2026 ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் கீழ் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 118 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்பு உதவிக்கான காசோலைகள் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் வழங்கி வைக்கப்பட்டன. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் இவ்விசேட வேலைத்திட்டத்தின் மாவட்ட ரீதியிலான ஆரம்ப நிகழ்வு புதன்கிழமை (25) இடம்பெற்றது.

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்தின் கீழ், களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் 915 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் 1,200 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது. அதற்கமைய குறித்த உதவிகளை பெற தகுதியான பயனாளிகள் அரசாங்கத்தினால் வெளிப்படையான முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தமக்கான வீடு ஒன்றை அமைப்பதற்கான நிதி வசதியற்ற வறிய குடும்பங்களுக்காக, புதிய அரசாங்கத்தின் “தமக்கான இடம் – அழகான வாழ்க்கை” எனும் எண்ணக்கருவின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. களுத்துறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 685 பயனாளிகளில், முதற்கட்டமாக 118 பேருக்கு காசோலைகள் வழங்கும் இந்த ஆரம்ப நிகழ்வு, களுத்துறை மாவட்ட செயலகத்தில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் புதன்கிழமை (25) நடைபெற்றது.

அமைச்சர் இதன்போது உரையாற்றுகையில்,

நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களினதும் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ், கிராம உத்தியோகத்தர் மட்டத்திலேயே இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. குறைந்த வருமானம் பெறும் மக்கள் அனைவரையும் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் ஒரே எதிர்பார்ப்பாகும். கடந்த காலங்களில் பல அரசாங்கங்கள் பல்வேறு வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்த போதிலும், 15 – 20 வருடங்களாக வீடு இல்லாமல் தவித்த தகுதியான பலருக்கு அந்தப் பலன்கள் கிடைக்காமல் போனது ஒரு கவலையான விடயமாகும்.

எமது அரசாங்கத்தின் கீழ், தகுதியானவர்கள் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினமாகும் போது, இந்த வீடமைப்பு உதவியைப் பெறும் அனைத்து பயனாளிகளும் தமது சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்பதே எமது இலக்காகும். தமக்கான வீட்டினை அமைத்து அதில் குடியேறிய பின்னர், மக்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியும். அரசாங்கம் வருமானத்தை ஈட்டும் திட்டங்களையும், அந்த வருமானத்தை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் திட்டங்களையும் மிகவும் திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களின் கீழ் 199 வீடுகளுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் 199 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அத்துடன், அரச ஊழியர்களுக்கான ‘சேவா அபிமானி’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு 43.015 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு, விசிறி வீடமைப்பு கடன் திட்டம், இந்திய வீடமைப்பு உதவித் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களின் ஊடாக களுத்துறை மாவட்டத்தில் இவ்வருடம் 915 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதற்கு மேலதிகமாக, மாற்றுத்திறனாளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 153 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. அமைச்சுக்கள் பலவற்றின் ஒருங்கிணைப்பில் இந்த ஆண்டு நாடு முழுவதும் 31,000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக 10,000 குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் மீள அறவிடப்படாத மானியமாக வழங்கப்படவுள்ளது என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button