அதிக விலையில் அரிசி விற்பனை செய்தால் அபராதத்துடன் சிறைத்தண்டனை

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் அபராதமுடன் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் நுகர்வோர் விவகாரசபை அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாவது,
அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் பின்வரும் தண்டனைகள் போன்ற கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
அதன்படி, உரிமையாளர்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் குறைந்தபட்சமாக 100,000 ரூபா அபராதமும் அதிகபட்சமாக 500,000 ரூபா அல்லது 6 மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது நிறுவனங்களுக்கு குறைந்தபட்சமாக 500,000 ரூபா அபராதமும் அதிகபட்சமாக 5,000,000 ரூபா அபராதமும் விதிக்கப்படும்.
மேலும், அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை இன் 1977 என்ற துரித எண் மூலம் பொதுமக்களை தகவல் தெரிவிக்குமாறு வலியுறுத்தப்படுகின்றது. – என்றுள்ளது.