(செல்வி வினாயகமூர்த்தி)
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு பயணத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “இலக்கிய மனனப் போட்டியின் இறுதி நிகழ்வு இன்று (26) புதன்கிழமை அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத் தலைவர் இறைபணிச்செம்மல்த. கயிலாயபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இராமகிருஷ்ண மிஷனைச் சேர்ந்த சுவாமி பிரம்மஞானானந்த மகராஜ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மேலும், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஆரியதாச தர்மதாச, இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜ் உள்ளிட்ட பலரும் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் இலக்கிய ஆர்வம், மனனத் திறன் மற்றும் ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்தும் நோக்கில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. தெரிவுப் போட்டியில் திருக்குறள், நாலடியார், இனியவை நாற்பது மற்றும் ஆத்திச்சூடி ஆகிய இலக்கியப் பிரிவுகளில் மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். இதனுடன், “விவேகானந்தமே ஆனந்தம்” என்ற தலைப்பில் சிறப்புப் பேச்சுப் போட்டிக்கான தெரிவும் இடம்பெற்றது.
தெரிவுப் போட்டியில் ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஏழு பாடசாலைகளிலிருந்து மொத்தமாக 48 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இறுதி நிகழ்வில் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் அதிதிகளின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டன. முதலாம் மற்றும் இரண்டாம் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் திறமைகளும் மேடையில் அரங்கேற்றப்பட்டன.
இதேவேளை, இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு பயணத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட “இராமகிருஷ்ண விஜயம்” எனும் நூல், சுவாமி பிரம்மஞானானந்த
மகராஜின் கரங்களினால் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
“அறிவை கற்போம் – ஒழுக்கம் பேணுவோம் – இலக்கியம் வளர்ப்போம்!” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்கள் மத்தியில் இலக்கிய ஆர்வத்தையும் நல்லொழுக்க விழுமியங்களையும் வளர்க்கும் வகையில் சிறப்பான பேச்சுக்கள் அமைந்திருந்தது.

