News

மேலும் 200 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை!

வரலாற்றில் முதல் முறையாக சுமார் 350 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 200 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கும்போது சுகாதார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுமார் 350 மருந்து வகைகளுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நாட்டு மருந்து விநியோகத் துறையில் இது புதிய புரட்சியாகும்.

எதிர்வரும் நாட்களில் மேலும் 200 மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கு மருந்துகளுக்கான விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் உள்ளது.

எனினும் 2023 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு விசாரணை காரணமாக அவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தனியார் மருந்தகங்களில், மருந்து வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

ஆகையால் மருந்துகளுக்கான விலையை நிர்ணயிப்பதற்கான புதிய வர்த்தமானி அறிவிப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

தற்போது மருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை தொடர்பில் மருந்து இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை நோய்கள், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருந்துகளுக்கு இவ்வாறு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button