Home இலங்கைச் செய்திகள்ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி – இலங்கையை மாற்று சரக்கு போக்குவரத்து மையமாக பயன்படுத்தும் புதிய வாய்ப்பு!

ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி – இலங்கையை மாற்று சரக்கு போக்குவரத்து மையமாக பயன்படுத்தும் புதிய வாய்ப்பு!

by Nabishad
0 comments

-Nabishad Abu Hanshif-

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் நிலவும் மத்திய கிழக்கு மோதல் காரணமாக சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மாற்று சரக்கு போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, லம்போர்கினி நிறுவனத்தின் 14 சொகுசு கார்கள் இலங்கை ஊடாக மாற்று வழியில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இத்தாலியில் தயாரிக்கப்பட்ட குறித்த 14 லம்போர்கினி கார்கள் கடல் மார்க்கமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

அங்கிருந்து அவை 7, 40 அடி கொள்கலன்களில் ஏற்றப்பட்டு, கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அங்கிருந்து குறித்த வாகனங்கள் பாரிய சரக்கு விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு துபாய் மற்றும் கட்டார் நாட்டின் தோஹா நகரங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

banner

இந்த சரக்கு போக்குவரத்தை கையாளும் டென்மார்க் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கையில், பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் காரணமாக பாரம்பரிய சரக்கு போக்குவரத்து பாதைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை ஊடான இந்த புதிய பாதை நாட்டிற்கு பொருளாதார ரீதியாக பலனளிக்கக்கூடிய மாற்று தளவாடப் பாதையாக அமையக்கூடும் என தெரிவித்துள்ளார்.
இந்த சரக்கில் உள்ள வாகனங்களின் பெறுமதி சில மாடல்களுக்கு சுமார் ரூ.100 மில்லியன் முதல், அதிக விலையுள்ள மாடல்களுக்கு சுமார் ரூ.500 மில்லியன் வரை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாகனங்கள் சில நாட்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில், அவற்றை ஏற்றிச் செல்லும் சரக்கு விமானம் ஆகஸ்ட் 21 ஆம் திகதி காலை கட்டுநாயக்கவிலிருந்து துபாய் மற்றும் தோஹாவிற்கு புறப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், இலங்கையின் தளவாடத் துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த நடவடிக்கையுடன் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தொடர்பிலும் சர்ச்சை எழுந்துள்ளது.
சரக்கு நடவடிக்கையை செய்தியாக பதிவு செய்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு ஆரம்பத்தில் விமான நிலைய அதிகாரிகள் தேவையான ஒத்துழைப்பை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், Cargo Village பகுதியில் உள்ள ஏற்றுமதிப் பிரிவில் பணியாற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகள், இந்த நடவடிக்கையை ஊடகங்கள் பதிவு செய்வதற்கு அனுமதி மறுத்ததுடன், ஊடகவியலாளர்களை அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
சர்வதேச உயர்மதிப்புள்ள சரக்குகளை கையாளக்கூடிய மாற்று தளவாட மையமாக இலங்கை உருவெடுக்கும் சாத்தியத்தை எடுத்துக்காட்டக்கூடிய இத்தகைய நடவடிக்கையை செய்தியாக பதிவு செய்ய ஊடகவியலாளர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

மேலும், ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதிலும், அங்கு கூடியிருந்த சிலர் தங்களது கையடக்கத் தொலைபேசிகள் மூலம் லம்போர்கினி வாகனங்களை புகைப்படம் மற்றும் காணொளியாக பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள நெருக்கடி காரணமாக சர்வதேச நிறுவனங்கள் மாற்று சரக்கு போக்குவரத்து பாதைகளைத் தேடி வரும் நிலையில், உயர்மதிப்புள்ள சர்வதேச சரக்குகளை கையாளக்கூடிய இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment