-Socialtv செய்தி பிரிவு முகாமையாளர் ஷிஹானா நௌபர் –
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றப் பரிசீலனை மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான முன்-வரவு செலவுத் திட்டக் கலந்துரையாடல் இன்று (14) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது, விவசாயிகளின் நெல் மற்றும் தானியங்களை உலர்த்துவதற்கு மானிய அடிப்படையில் உலர்த்தும் இயந்திரங்களை வழங்குதல், நாடளாவிய ரீதியில் மொத்த விநியோக மையங்கள் மற்றும் கிராமிய அரிசி பதப்படுத்தும் நிலையங்களை அமைத்தல், நுவரெலியா உருளைக்கிழங்கு கொள்முதல் மையம் மற்றும் மொனராகலை தானியப் பதப்படுத்தும் மையத்தின் கட்டுமானப் பணிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் பெரிய வெங்காயம் மற்றும் சோள விவசாயிகளுக்காக புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இலங்கை போன்ற சிறிய சந்தையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைக் கட்டுப்பாட்டை வெறும் சந்தைப் போட்டியின் மூலம் மட்டுமே எதிர்பார்க்க முடியாது என்பதால், அரசாங்கத்திடம் வலுவான விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறை இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்காக லங்கா சத்தோச மற்றும் கூட்டுறவு இயக்கத்தை மேலும் வலுப்படுத்தி, சந்தையின் முக்கிய பங்குதாரர்களாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டது.
மேலும், திரிபோஷா தயாரிப்புகளின் தரத்தை மேலும் உயர்த்துவது குறித்தும், நாட்டின் பொருளாதார இலக்குகளை எட்டுவதற்கு வெளிநாட்டுச் சந்தைகளைக் கைப்பற்றுவதில் வர்த்தகத் திணைக்களத்தின் பங்களிப்பு மற்றும் நுகர்வோருக்கு தரமான பொருட்களை உறுதி செய்வதில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் செயற்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

