காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் (CSOs) மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான கலந்துரையாடல் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் ரீ.யோகராஜா தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (19) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்கள் , கலந்துகொண்டதுடன் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் திருமதி ஜெயதீபா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்குபற்றினர்.
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்புகள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான விடயங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும், காணாமல்போன ஆட்கள் தொடர்பான விடயங்களில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுக்கக்கூடிய செயற்பாடுகள் தொடர்பான கருத்துக்களும் இதன்போது பரிமாறப்பட்டன.
எதிர்வரும் காலங்களில் காணாமல்போன ஆட்கள் தொடர்பான விடயங்களில் ஒருங்கிணைந்த முறையில் செயற்படுவதற்கான வழிமுறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மட்டக்களப்பு பிராந்திய காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இணைப்பாளர், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

