விபத்துக்கள் நேர்ந்தால் ஓட்டியவரைப்போல் வாகனம் கொடுத்தவருக்கும் அதே தண்டனை!
இலங்கை பொலிஸார் கடுமையான எச்சரிக்கை!
இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவருக்கு மோட்டார் சைக்கிள் அல்லது எந்தவொரு வாகனத்தையும் ஓட்ட அனுமதிக்கும் நபர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், உரிமம் இல்லாத நபர் மட்டுமன்றி, அவருக்கு வாகனத்தை வழங்கிய நபரும் சமமான குற்றவாளியாகவே கருதப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மோட்டார் வாகனச் சட்டத்தின் (Motor Traffic Act) படி, தகுந்த சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தை ஓட்டக் கொடுப்பது பாரதூரமான குற்றமாகும். இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, 25,000 ரூபா முதல் 50,000 ரூபா வரையில் கடுமையான அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட சட்டத்தில் இடமுண்டு.
அத்தோடு, மிரிஸ்ஸ, வெலிகம, களுத்துறை மற்றும் ஹிக்கடுவ போன்ற சுற்றுலாப் பிரதேசங்களில் வெளிநாட்டுப் பிரஜைகள் பலர் முறையான இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது சர்வதேச ஓட்டுநர் உரிமம் இன்றி மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்து ஓட்டுவது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், வாடிக்கையாளரின் ஓட்டுநர் உரிமத்தை முழுமையாக சரிபார்த்த பின்னரே வாகனங்களை வழங்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர் ஒருவர் வாகனத்தை ஓட்டிச் சென்று ஏதேனும் விபத்துக்களை ஏற்படுத்தினால், வாகனத்தின் உரிமையாளரும் அந்த விபத்துக்கான முழுப் பொறுப்பாளியாகக் கருதப்படுவார்.
விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் அல்லது சேதங்களுக்கு வாகன உரிமையாளரும் சட்ட ரீதியாகப் பதிலளிக்க வேண்டும் என்பதுடன், அவர்களது வாகன காப்புறுதி (Insurance) நன்மைகளும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.
இவை அனைத்தும் ஏலவே இருக்கும் சட்டங்கள்தான், ஆனால் இனி அவை கடுமையான முறையில் பாரபட்சமின்றி அமுல்படுத்தப்படும்!
எனவே, பொது மக்கள் தங்களது வாகனங்களை மற்றவர்களுக்கு வழங்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

